Monday, January 4, 2010

[Tamil Poem] இறைவனுக்கும் மறதி உண்டோ?

மலருக்குள்
தேனை
மறைத்து வைத்தாய்

சிப்பிக்குள்
முத்தை
அடைத்து வைத்தாய்

பூமிக்குள்
எரிப்பொருளை
புதைத்து வைத்தாய்

அணுவிற்குள்
சக்தியை
அடக்கி வைத்தாய்

இத்தனை செய்த
இறைவா
மானிடனுள் தூயன்பை வைக்க
மறந்துவிட்டாய்

[Tamil Poem] தாய்....

செந்தாமரை முகத்தவளே
பைந்தமிழ் அமுதை ஊட்டியவளே

உன் பொறுமையைக் கண்டு
நத்தை தன் வேகத்தைக்
குறைத்திடும்

உன் பண்பை கண்டு
சுனாமியும் பணிவை
உணர்ந்திடக்கூடும்

உன் எளிமையைக் கண்டிருந்தால்
காமராஜர் இன்னும்௯ட சிக்கனமாய்
இருந்திருக்கக்௯டும்

பாரதியே இக்காலத்தில் பிறந்திருந்தால்
மம்மி என்றே அழைத்திருப்பான்
தன் தாயை

என்னை அம்மா என்று
கூற வைத்தவளே
என்னுள் தமிழ்ப்பாலை
கலந்திட்டவளே

நான் செய்த பிழைதான் என்னவோ?
என்னைவிட உனக்கு
எமனைத்தான் பிடிக்குமோ?

Sunday, January 3, 2010

[Tamil Poem] பொய் முகங்கள்

வலியவரிடம் அப்பாவியாக
இளைத்தவனிடம் வீரனாக
மனைவியிடம் கதாநாயகனாக

பிரச்சனன என்றதும் ஒரு சந்தர்ப்பவாதியாக
தயவைத்தேடி வருபவர்களிடம் (சர்வ) அதிகாரியாக
பெண்களிடம் நகைச்சுவையாளனாக

நமக்குப் பிடிக்காதவர்களைப் புறம்பேசுபவனாக
ஒருத்தரின் மறைவுக்குப் பின் பலமாக புகழ்பவனாக
நமக்குத்தான் எத்தனை பொய் முகங்கள்!!

[Tamil Poem] தந்தை....

மறக்கவில்லை நான் எதையும்!
நான் உயரவேண்டும் என்பதற்காக
நீ குனிந்த இடங்கள் தான்
எத்தனையோ!

நான் அவதிப்படாமல் வாழ
நீ உன் கனவுகளைத்
தியாகம் செய்தது தான்
எத்தனையோ!

மாடுதன்
ரத்ததைப் பாலாய்க் கொடுக்கிறது
நீ
உன் ரத்தத்தையும்,
வியர்வையும் கலந்து
எனக்கு
வியர்வையற்ற
ஒர் வாழ்க்கையை கொடுத்திருக்கிறாய்

பக்கத்துவீட்டுப்பையனைப் பார்த்து
நம் நிலையரியாமல் நான் விரும்ப
உன் சக்திக்குமீறி வாங்கினாய்
எனக்கு ஒரு சைக்கிள்

எதிர் வீட்டில் சென்று நான்
ஒளியும் ஓலியும் பார்த்ததால்
உன் வரவுக்கு மீறி வாங்கினாய்
ஒரு வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி

நான் படித்த பட்டம்
நான் இன்று இருக்கும் பதவி
எதுவும் எனதில்லை
நீ
என்னைப்பற்றி அன்று
கனவுகளின்றி இருந்திருந்தால்!!

உன் கோபம் எரிமலையைப் போன்றது
எதிர்த்து நிற்பவர்களைப் பொசிக்கிவிடும்
அதைக்கண்டு பெருமை அடைந்திருக்கிறேன் பலமுறை;
அநேக நேரம்
உன் கோபம்
நியாயத்தை நிலைநிறுத்த
புறப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்களே

உன்னைச் சர்வாதிகாரி
என்றே வர்ணிப்பேன்
பள்ளிப்பருவ நண்பர்களிடம்
ஆனால்
நீ திட்டியதும், அடித்ததும்
ஒர் சிற்பி சிலைச்செதுக்க
உளியால் பாறையை அடித்ததற்குச்
சமம் என்று உணர்ந்தேன்
பின்பு!

நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
ஒர் தகப்பனாய் கோபப்படாமல்
ஒர் நண்பனாய்
இக்கல்யாணம் எப்படியும் நடக்கும்
என்று தைரியம் சொன்னாயே
அதை நினைத்தால்
இன்றும் என்னுள் சக்திப்பிறக்குது
இமயத்தைப் புரட்டிப்போட!

நீ ஒர் நல்ல தந்தையாய்
வாழ்ந்துகாட்டிவிட்டாய்
நான் ஒர் நல்ல தமயனாய்
இருந்துகாட்ட
எத்தனைக்காலம் தான் ஆகுமோ?

Saturday, January 2, 2010

[Tamil Poem] மலர்கள்

நாம் அனைவரும் கொலைகாரர்களே!
ஆம்
பல காலம்
வாழத் துடிப்போம் நாம்;
பிறந்தவுடனே
பரித்து மடிப்போம் பூக்களை மட்டும்!

அதிலும் பெண்கள் சுயநலக்காரர்கள்!
ஆம்
அவர்கள் சுமங்கலி யாயிருக்க
பூச்செடியை அமங்கலி யாக்கிடுவர்!

[Tamil Poem] இப்படியல்லவா நாம் வாழ்கிறோம்?

மனிதனாய்ப்பிறந்தோம் -
மதிகெட்டு இருந்தோம்

எழுதிவைத்ததைப்படிப்போம் -
ஏன் படித்தோம் என்பதை மறப்போம்

மதம், சாதி என்று பிரிவோம் -
மனமதில் சாக்கடையை நிரப்புவோம்

பணத்தை உடல் முழுவதும் ஏற்றிவிட்டோம் -
அன்பை என்றோ தொலைத்துவிட்டோம்

தீமைகள் பல செய்துவிட்டோம் -
பிறர்மேல் குற்றம் சுமத்திவிட்டோம்

உடல் தளர்ந்திடுவோம் -
ஆயினும் வீண் பெருமை பேசிடுவோம்!

Friday, January 1, 2010

[Tamil Poem] நாள்காட்டி சொல்லும் படிப்பினை

உரிக்க உரிக்க
ஒன்றும் இல்லா
வெங்காயத்தைப்போலன்றி

கிழிக்கக்கிழிக்க
புதிய செய்தியுடன்
வரும்
நாள்காட்டிப்போல் வாழ்!