Saturday, April 17, 2010

[Tamil Poem] உலகமயம்...

நீ வந்த பின்னே
உலகமே ஒர்
கிராமமாய்ச்சுருங்கியது

அமெரிக்கா அண்டைமாநிலமானது
ஐரோப்பா பக்கத்து வீடானது
மிக்க மகிழ்சியே!
ஆனால்
எங்கள் நாட்டில் உன்னால்
பல கிராமங்கள் அழிந்தே
போயினவே தெரியுமா?

*

உழவனுக்காக பண்டிகை
அரசு விடுமுறை
பொங்கலைக் கொண்டாட
உழவன் தான் இங்கில்லை!

*

கணிப்பொறி கற்றவன் கரையேறினான்
களிமண்ணில் உழைத்தவன் புரைதள்ளினான்!

ஆங்கிலம் பேசுபவன் தழைக்கிறான்
தாய்மொழி பேசுபவன் விழிக்கின்றான்!!!

மின்வலை தெரிந்தவன் உயருகின்றான்
மீன்வலை அறிந்தவன் சாகின்றான்!!

வாழ்க உலகமயம்!

Wednesday, April 14, 2010

[Tamil Poem] கண்ணகிக்கு கற்சிலை தேவையா?

கள்வன் என உன்
கணவனைக் கொன்றிட
நெருப்பைக் கக்கியவளே!
மதுரையை எரித்தவளே!
கற்புக்கரசியே கண்ணகியே!

கோவலன் தலைக்கு
இவ்வளவு விலையா?

அரசன் செய்திட்டது
நீதியென்றுரைக்கவில்லை
ஆனால் தாயே
நீயென்ன நீதி செய்தாய்
சொல்வாயோ?

பாண்டியன் செய்தபிழைக்கு
பாமரனை வதைத்ததுதான்
நியாயமோ?

மதுரையை எரித்திட்டதற்க்கு
புண்ணியம் செய்ததைப்போல்
இப்புவி காண கற்சிலைதான்
தேவையோ?

கோவலனுக்காய் நீ எரித்த மதுரையில்
எத்தனைக் கோவலன்கள் மாண்டனரோ!
மாண்டவர்களின் மனைவியரும்
மண்ணெரிக்க புறப்பட்டால்
இப்புவிதனில் மானிடமின்றி
கற்சிலைகளே மிஞ்சும்!