Saturday, April 17, 2010

[Tamil Poem] உலகமயம்...

நீ வந்த பின்னே
உலகமே ஒர்
கிராமமாய்ச்சுருங்கியது

அமெரிக்கா அண்டைமாநிலமானது
ஐரோப்பா பக்கத்து வீடானது
மிக்க மகிழ்சியே!
ஆனால்
எங்கள் நாட்டில் உன்னால்
பல கிராமங்கள் அழிந்தே
போயினவே தெரியுமா?

*

உழவனுக்காக பண்டிகை
அரசு விடுமுறை
பொங்கலைக் கொண்டாட
உழவன் தான் இங்கில்லை!

*

கணிப்பொறி கற்றவன் கரையேறினான்
களிமண்ணில் உழைத்தவன் புரைதள்ளினான்!

ஆங்கிலம் பேசுபவன் தழைக்கிறான்
தாய்மொழி பேசுபவன் விழிக்கின்றான்!!!

மின்வலை தெரிந்தவன் உயருகின்றான்
மீன்வலை அறிந்தவன் சாகின்றான்!!

வாழ்க உலகமயம்!

Wednesday, April 14, 2010

[Tamil Poem] கண்ணகிக்கு கற்சிலை தேவையா?

கள்வன் என உன்
கணவனைக் கொன்றிட
நெருப்பைக் கக்கியவளே!
மதுரையை எரித்தவளே!
கற்புக்கரசியே கண்ணகியே!

கோவலன் தலைக்கு
இவ்வளவு விலையா?

அரசன் செய்திட்டது
நீதியென்றுரைக்கவில்லை
ஆனால் தாயே
நீயென்ன நீதி செய்தாய்
சொல்வாயோ?

பாண்டியன் செய்தபிழைக்கு
பாமரனை வதைத்ததுதான்
நியாயமோ?

மதுரையை எரித்திட்டதற்க்கு
புண்ணியம் செய்ததைப்போல்
இப்புவி காண கற்சிலைதான்
தேவையோ?

கோவலனுக்காய் நீ எரித்த மதுரையில்
எத்தனைக் கோவலன்கள் மாண்டனரோ!
மாண்டவர்களின் மனைவியரும்
மண்ணெரிக்க புறப்பட்டால்
இப்புவிதனில் மானிடமின்றி
கற்சிலைகளே மிஞ்சும்!

Thursday, February 4, 2010

[Tamil Poems] மயானம்

மதத்தைக் கவசமாக்கி
நாக்கை ஆயுதமாக்கியதால்
சவங்களாக விழுகிறார்கள்
மனிதர்கள்!
அவர்களுக்கு சமத்துவம்
கற்றுத்தருகிறது
மயானம்!

Sunday, January 24, 2010

[Tamil Poem] இலங்கைத்தமிழன்

இலங்கையருகில்
கடல் தண்ணீரின்
நிறம்
கடந்த நாற்பது
ஆண்டுகளாக
சிவப்பு நிறமாம்!

இலங்கையினுள்
தமிழனை
எரித்து எரித்து
தின்று தின்று
வெறுத்துப் போன
நெருப்பு
விருப்பவோய்விற்கு
எழுதிப்போட்டுள்ளதாம்!

இலங்கையில்
தமிழனின் வீட்டில்
அடுப்பு ஏற்றப்படுகிறதோ
இல்லையோ
வீட்டின் கூரைகள்
மறக்காமல்
கொளுத்தப்படுகின்றனவாம்!

*

"ஈழத்தோழன் கதறுகிறான்"

தாய்நாட்டில் சொந்தங்கள்
சமாதியாய்
வெளிநாட்டில் பந்தங்கள்
அகதியாய்

இங்கே
ஆயுதங்கள் அழிக்கப்பட்டு
மானிடம் வாழுமா?
அல்லது
மானிடம் அழிக்கப்பட்டு
ஆயுதங்கள் சிதறிக்கிடக்குமா?

அரசே
முதலில் குண்டெறிந்தது
தமிழனா? சிங்களத்தவனா?

முதலில் கொலையுண்டது
தமிழனா? சிங்களத்தவனா?

தெரியவில்லை எனக்கு
ஆனால்

நிச்சயம் சொல்வேன்
சத்தியம் செய்வேன்

இங்கே
மனித மனங்கள் சுருங்கியதால்
மயானங்கள் பெருகியது

மனங்களை விரிப்போம்
ஜனங்களை காப்போம்!

Thursday, January 14, 2010

[Tamil Poem] தியாகி ...

உடலை வருத்தி
உணவைச் சுருக்கி
உன்னை உருக்கி
சுதந்திரத்தீ உருவாக்கி
வீரம் பெருக்கி
நீ வாங்கிய விடுதலை தான் எங்கே?

*
காதலர்கள் காலாற
நடைப்பயில முடியவில்லை!

முசல்மான்கள் நிம்மதியாய்
வாழ முடியவில்லை!

கடவுள்சிலைகளே காக்கிகள்
துணையின்றி
நடமாட முடியவில்லை!

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

உனக்குத்தெரியுமா?
உன் சந்ததியரே
வெள்ளையனிடம்
விரும்பிச்சென்று
(அடிமைகளாய்)
வேலை செய்யும் காலமிது!!

*

இந்திய மக்கட்தொகையில்
பாதி வறுமைக்கோட்டிற்கீழ்
மீதி அறிவுக்கோட்டிற்கீழ்!!!

படிக்கும் குழந்தைகளையோ
பட்டைத் தீட்டுகின்றனர்
அயல்நாட்டில்
(பிற்காலத்தில்)
அறிவை அடமானம்வைக்க!

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

*

இந்திய வரைப்படத்தைச்
சுருக்க தீவிரம்காட்டுகிறது
அண்டை நாடுகள்

இந்திய நதிகளிலிருந்து
தண்ணீர் கொடுக்காமல்
மனித மனங்களை
சுருக்கியே வைத்திருக்கிறது
அண்டை மாநிலக்கட்சிகள்

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

*

மதங்களின் பெயரால் கொலைகள்
வறுமையின் பெயரால் கொலைகள்
காமத்தின் பெயரால் கொலைகள்
அரசியல் காழ்புணர்ச்சியில் கொலைகள்
மனிதவுயிர்கள் மலிவாய் போன காலமிது

பின்பு
நீ வாங்கிய
விடுதலைத் தான்
யாருக்கு?

*

நதிகளை இணைக்க
மனங்களைத் திறக்க
மதத்தலங்களைக் காக்க
மற்றுமொறு விடுதலைப்போர்
தேவைப்படுகிறது தியாகியே!

சுதந்திரத்திற்குப் பின் உன்னை மறந்தோம்
உன் விலாசம் தொலைத்தோம்
இன்று தேவையிருக்கிறது
தேடுகிறோம்
தேடுகிறோம்
வேலைப் பளுவால்
வீட்டிலிருந்தபடியே இணையத்தளத்தில்!!!

Friday, January 8, 2010

[Tamil Poem] போரில் மடிந்த கிராமத்து வீரனின் மனைவி

ஒத்தையடிப் பாதையிலே
சத்தமின்றி
நீ போகையிலே

ஒட்டுமொத்த நாட்டுமக்கள்
கூடி நின்று
அழுகையிலே

நாம்பெத்த ராசா
ஒன்னுமறியா
முழிக்கையிலே

எனக்கு
ஒட்டுச்சொட்டுக்
தண்ணீவரலே
உனக்கு
முன்பு கொடுத்த
வாக்கினாலே!!

ஆனால்
நாட்டு மக்கள்
கண்ணீராலே
என்
நெத்திக் குங்குமம்
காணலியே!!

*

ரத்தத்தில் திலகமிட்டு
யுத்ததிற்கு அனுப்பினேன்
நான்

உன் குருதியை
தேசப்பெண்களுக்கு
தானங்கொடுத்து
அவர்கள் திலகத்தைக்
காத்திருக்கிறாய்
நீ

[Tamil Poem] கற்றுக்கொள்

தன் தலையை எரித்து
பிறருக்கு ஒளிதரும்
தீக்குச்சியிடம்
தியாகத்தைப் படி

சில நாட்களே வாழினும்
தன்னுள் தேனைவைத்து
பறவைகளுக்குக் கொடுக்கும்
மலர்களிடம்
சேவையைப் படி

தலைகீழ் தொங்கினும்
சுகமாய் பிறருக்குக் காற்றைத்தரும்
மின்விசிறியிடம்
பணிவைப் படி

எத்தனை முறை அழித்தாலும்
தன் கனவு இல்லத்தை
மற்றொரு முறை பின்னும்
சிலந்தியிடம்
விடாமுயற்சியைப் படி

வெட்ட வெட்ட வளரும்
விரல் நகங்களிடம்
வளர்ச்சியைப் படி

நெருப்புக்குழம்பைத் தன்மீது வாங்கி
விண்ணூர்தி பறக்கச் செய்யும்
விண்தளத்திடம்
தாங்கிக்கொள்வதைப் படி