மறக்கவில்லை நான் எதையும்!
நான் உயரவேண்டும் என்பதற்காக
நீ குனிந்த இடங்கள் தான்
எத்தனையோ!
நான் அவதிப்படாமல் வாழ
நீ உன் கனவுகளைத்
தியாகம் செய்தது தான்
எத்தனையோ!
மாடுதன்
ரத்ததைப் பாலாய்க் கொடுக்கிறது
நீ
உன் ரத்தத்தையும்,
வியர்வையும் கலந்து
எனக்கு
வியர்வையற்ற
ஒர் வாழ்க்கையை கொடுத்திருக்கிறாய்
பக்கத்துவீட்டுப்பையனைப் பார்த்து
நம் நிலையரியாமல் நான் விரும்ப
உன் சக்திக்குமீறி வாங்கினாய்
எனக்கு ஒரு சைக்கிள்
எதிர் வீட்டில் சென்று நான்
ஒளியும் ஓலியும் பார்த்ததால்
உன் வரவுக்கு மீறி வாங்கினாய்
ஒரு வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி
நான் படித்த பட்டம்
நான் இன்று இருக்கும் பதவி
எதுவும் எனதில்லை
நீ
என்னைப்பற்றி அன்று
கனவுகளின்றி இருந்திருந்தால்!!
உன் கோபம் எரிமலையைப் போன்றது
எதிர்த்து நிற்பவர்களைப் பொசிக்கிவிடும்
அதைக்கண்டு பெருமை அடைந்திருக்கிறேன் பலமுறை;
அநேக நேரம்
உன் கோபம்
நியாயத்தை நிலைநிறுத்த
புறப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்களே
உன்னைச் சர்வாதிகாரி
என்றே வர்ணிப்பேன்
பள்ளிப்பருவ நண்பர்களிடம்
ஆனால்
நீ திட்டியதும், அடித்ததும்
ஒர் சிற்பி சிலைச்செதுக்க
உளியால் பாறையை அடித்ததற்குச்
சமம் என்று உணர்ந்தேன்
பின்பு!
நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
ஒர் தகப்பனாய் கோபப்படாமல்
ஒர் நண்பனாய்
இக்கல்யாணம் எப்படியும் நடக்கும்
என்று தைரியம் சொன்னாயே
அதை நினைத்தால்
இன்றும் என்னுள் சக்திப்பிறக்குது
இமயத்தைப் புரட்டிப்போட!
நீ ஒர் நல்ல தந்தையாய்
வாழ்ந்துகாட்டிவிட்டாய்
நான் ஒர் நல்ல தமயனாய்
இருந்துகாட்ட
எத்தனைக்காலம் தான் ஆகுமோ?